435. விவேகானந்தர் இல்லப் பிரச்சினை - தமிழக அரசு பல்டி ?
லேடி வில்லிங்க்டன் பள்ளிக்கு அருகில் உள்ள விவேகானந்தர் நினைவு இல்லத்தை இடித்து விட்டு, அந்த இடத்தில், தமிழ்ச் செம்மொழி மையம் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், அரசின் பொதுப்பணித் துறையைச் சேர்ந்த இரு அதிகாரிகள், "விவேகானந்தர் இல்லத்தை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள வேறு கட்டடத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். இந்த இடத்தில் தமிழ் செம்மொழி மையம் அமையவுள்ளது" என்று வாய்மொழியாக அரசின் எண்ணத்தை மடத்தின் பொறுப்பாளர்களிடம் தெரிவித்ததாகவும், ஊடகங்களில் செய்திகள் வந்தன.
மேலும், இது குறித்து ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி கவுதமானந்தர் கூறியதாவது:
எங்களது மடத்திற்கு தொடர்பு கொண்ட தொழில் அதிபர் ஒருவர், "விவேகானந்தர் இல்லம் உள்ள இடத்தை முதல்வர் கருணாநிதி காலி செய்யச் சொல்லியுள்ளார். எனவே, காலி செய்து கொடுத்து விடுங்கள்' என எங்களது மேலாளரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர், "மடத்தின் தலைவர் வெளியூர் சென்றுள்ளார். அவர் 23ம்தேதி திரும்புவார். அவர் வந்ததும் தகவல் தெரிவித்து, முதல்வரை சந்திக்க சொல்கிறேன்" என பதில் தெரிவித்துள்ளார். பிறகு, மீண்டும் தொடர்பு கொண்ட அந்த தொழிலதிபர், "முதல்வரிடம் நீங்கள் சொன்னதை தெரிவித்தேன். உங்கள் தலைவர் 23ம்தேதி சென்னை திரும்பியவுடன் 24ம்தேதி இடத்தை காலி செய்து விடுங்கள். அதன் பின் வேண்டுமானால் என்னை வந்து சந்திக்கட்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்" எனக் கூறினார்.
இதில் கவனிக்கப்பட வேண்டியது, அந்த தொழில் அதிபர் நேரடியாக முதல்வரின் பெயரைச் சொல்லி வி.இல்லத்து மேலாளரை (இடத்தை காலி செய்ய வேண்டி) அரசியல் ரீதியாக அச்சுறுத்திய சமாச்சாரம் தான் :(
அரசின் கட்டாயத்தால், எங்கே வி.இல்லத்தை காலி செய்து கொண்டு ராமகிருஷ்ணா மடத்தினர் சென்று விடுவார்களோ என்று எண்ணிக் கொண்டு, பல வருடங்களுக்குப் பின் மீண்டும் விவேகானந்தரின் நினைவு இல்லத்துக்கு நேற்று ஒரு விசிட் அடித்தேன். நேற்று வி.இல்லத்திற்கு வார விடுமுறையாக இருந்தும், (நுழைவுக் கட்டணம் இல்லாமல்) எனக்கு ஸ்பெஷல் அனுமதி கிடைத்தது சுவாமி விவேகானந்தரின் அருள் தான் !
அமைதியான, ரம்யமான சூழல் ! இந்து சமயம் பற்றி ஒரு முகவுரை தரும் வகையில் போஸ்டர்களும், ஓவியங்களும், சுவாமிஜியின் அறிவுரைகளும், அவரது வாழ்க்கை குறிப்புகளும், புகைப்படங்களும், மூன்று தளங்களில் அமைக்கப்பட்ட கண்காட்சியில் காணப்பட்டன. சுவாமிஜி, ராமகிருஷ்ணர் மற்றும் இந்து சமயம் சார்ந்த அருமையான புத்தகங்கள் விற்பனைக்கு இங்கு கிடைக்கின்றன.
1893-இல் சிகாகோ உலக சமய பாராளுமன்றத்தில் சுவாமிஜி, உலகப் பிரசித்தி பெற்ற சமய / தத்துவச் சொற்பொழிவுகளை வழங்கி விட்டு, ஒரு நான்காண்டுகள் உலகப்பயணத்திற்குப் பின், 1897-இல் சென்னைக்கு இரண்டாம் முறை வந்தபோது, ஒரு வார காலம், வி.இல்லத்தில் உள்ள ஓர் அறையில் தங்கியிருந்தார். அந்த அறை தற்போது (விரும்புபவர்கள்) தியானம் செய்ய பயன்படுகிறது. தியானத்தையே மனிதனின் பல இடர்களுக்கு மருந்தாக சுவாமிஜி பரிந்துரைத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
வி.இல்லத்தை அரசு காலி செய்ய வற்புறுத்திய பிரச்சினைக்கு மீண்டும் வருவோம் !
இப்போது எல்லாமே தலைகீழாக மாறியது போலத் (அல்லது, முதல்வர் பெயரை அந்த தொழிலதிபர் தவறாகப் பயன்படுத்தியது போலத்) தெரிகிறது , முதல்வர் கருணாநிதி இன்று சட்டசபையில் கூறியிருப்பதை வைத்துப் பார்த்தால் !!! அதாவது,
விவேகானந்தர் இல்லத்தை இடிக்கும் பேச்சிற்கே இடமில்லை என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தமிழ் செம்மொழி ஆய்வு மையத்திற்காக விவேகானந்தர் இல்லத்தை இடிப்பது தொடர்பாக சட்டசபையில் இன்று எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பினர். இதையடுத்து பேசிய முதல்வர், விவேகானந்தர் மீது தனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு என்றும், விவேகானந்தர் இல்லத்தை இடிக்கும் பேச்சிற்கே இடமில்லை என்றும் கூறினார்.
என்ன தான் நடந்தது / நடக்கிறது / நடக்கப்போகிறது என்பது சுவாமிஜிக்கே வெளிச்சம் !!!!
எ.அ.பாலா
நன்றி: தினமலர்